Directory

கல்வி - விக்கிமேற்கோள் உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வி

விக்கிமேற்கோள் இலிருந்து
  • "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!" - தம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும். மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்வி கற்றல் வேண்டும். - இலக்கியம்
  • மனித ஆளுமை அளவிட முடியாத திறன் வாய்ந்தது என்பதில் நான் திடமான நம்பிக்கை கொண்டுள்ளேன்; ஒவ்வொருவரும் ஓர் ஆக்கராக முடியும் - அவர்களின் தடயத்தை இவ்வுலகில் விட்டுச் செல்ல முடியும்.
  • காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது; ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும் - கோடானுகோடி விண்மீன் திரள்கள், ஒவ்வொன்றும் ஒளிருவதைப் போல. --- வாசிலி சுகோம்லின்ஸ்கி ஆதாரம்
  • ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது - மகா கவி பாரதி
  • கல்வி விரல்களுக்களைத்தான் வேலை வாங்குகிறதே தவிர மூளையையும் மனசையும் முழுமையாக்கவில்லை. - கவிஞர் வைரமுத்து
  • தேர்வு முறை என்பது அறியாமையை அளக்கிற அளவுகோல் தானே தவிர அறிவை அளக்கும் அளவுகோல் அல்ல. - கவிஞர் வைரமுத்து
  • கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தன் வாழ்நாளில் முழு சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிபடுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும். - தந்தை பெரியார்
  • இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன்; எதிர்கால வாழ்விலும் இறந்தவன்! - யூரிபிடிஸ்
  • கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்! - பிளேட்டோ
  • கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்! - எட்மண்ட்பர்க்
  • கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்! - ரஸ்கின் பாண்ட்
  • வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது! - பெர்னார்ட்ஷா
  • நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும்; நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்! - மூர்
  • நிறைகுடம் நீர்தளும்பல் இல்- பழமொழி நானூறு
  • சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்! - போலிங் புரூக்
  • தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுமே கல்வி! - பெஸ்டலசி
  • ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி! - ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்
  • ஆசிரியர்களே மாணவர்களோடு விளையாடுங்கள், ஒருபோதும் விளையாட்டை வழி நடத்தாதீர்கள். ஆண்டன் மக்கரென்கோ
  • மக்கள் உடலுக்கு உணவு எத்தகையதோ அத்தகைத்து மக்கள் அறிவிற்குக் கல்வி. மனிதன் அறியாமையைக் கல்வி அறிவை விளக்கி அவனது வாழ்வை நேர்மையில் செலுத்தவல்லது கல்வி - திரு. வி. கலியாணசுந்தரனார்[1]
  • கல்வி என்பது வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமன்று. பட்டம் பதவிகளைக் குறிக்கொண்டு படித்தலும் கல்வியாகாது. கல்வி என்பது அறியாமையை நீக்கி அறிவை விளங்கச் செய்வது - திரு. வி. கலியாணசுந்தரனார் [1]
  • கல்வியே ஆன்மாவின் உணவு, அஃதின்றேல் நம் சக்திகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும், பயன்தரா. -மாஜினி[2]
  • கல்வியும் வாளுமே ஒரு தேசம் புத்துயிர் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும். -மாஜினி[2]
  •  கல்விச்சாலையொன்று திறப்பவன் சிறைச்சாலையொன்றை மூடுபவன். -விக்டர் ஹூகோ[2]
  • மனத்தில் நோயில்லையானால் கல்விக்கு அவசியமில்லை. -அந்தோனி[2]
  • அறிவு தரும் கல்விக்கு ஆகும் செலவை விட அறியாமைக்கு ஆகும் செலவே அதிகம். -ஆவ்பரி[2]
  •  கல்வி எதற்காக? நல்ல தொழிலாளி ஆக்குவதற்கே. -ஆவ்பரி[2]
  • கல்வி கற்பிக்க ஒவ்வொருவனிடம் ஒரு மாணவனாவது இருக்கவே செய்கிறான். -ஆவ்பரி[2]
  • அதிகம் கற்றவரே அற்பமாகவே தெரியும் என்று அறிந்து கொள்ளக் கூடியவர். -ஆவ்பரி[2]
  • வாழ்வில் வெகு முக்கியமாய்க் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் எங்ஙனம் வாழ்வது என்பதே. -ஆவ்பரி[2]
  • கற்பது கடினம், ஆனால் அதை விடக் கடினம் கற்பதை மறப்பது. -ஆவ்பரி[2]
  •  பிறர் உவக்கும் வண்ணம் நடந்து கொள்வதற்கான ஆசையும் அறிவும் ஏற்படுத்துவதே குழந்தைகளை கெளரவமானவராக வளர்ப்பதன் சாரமாகும். -ஹோம்ஸ்[2]
  • கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதே யாகும். -ரஸ்கின்[2]
  • மிருதுவாக மரம் இழைக்க, நேரான கோடு கிழிக்க, கோணாத சுவர் எழுப்பக் கற்றுக் கொள்ளட்டும். அப்படியானால் எந்த மனிதனும் எந்தக் காலத்திலும் கற்பிக்க இயலாத அத்தனை விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். -ரஸ்கின்[2]
  • எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுத்து, எண்ணை மறத்துக்கும் எழுத்தைக் காமத்துக்கும் உபயோகிக்க விட்டுவிடுவது கல்வி யாகாது. ஆக்கைக்கும் ஆன்மாவுக்கும் பரிபூரணமான பயிற்சி தந்து அவற்றை அடக்கியாளக் கற்பிப்பதே கல்வி. -ரஸ்கின்[2]
  • கல்வியின் லட்சியம் நல்ல காரியங்களைச் செய்யக் கற்றுக் கொடுப்பதன்று; நல்ல காரியங்களைச் செய்வதில் ஆசையும் ஆனந்தமும் உண்டாக்குவதேயாகும். -ரஸ்கின்[2]
  • கல்வியின் லட்சியம் விஷயங்களை அறிவது அன்று, வேலைக்கு அடிகோலுவது மன்று, சான்றோனாகவும் அறிஞனாகவும் செய்வதேயாகும். -ரஸ்கின்[2]
  • சரியான வழியில் சந்தோஷம் அடையச் செய்யாத கல்வி எல்லாம் வீணேயாகும். -ரஸ்கின்[2]
  • நடை எழுதவும் இசை பாடவும் உருவந்தீட்டவும் முழு வல்லமை பெற்ற பொழுதே கல்வி முற்றுப் பெறும். -ரஸ்கின்[2]
  •  ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் துண்டுவதே உண்மையான கல்வி. ஆனந்தம் அளிப்பதும் அதுவே. -ரஸ்கின்[2]
  • குழந்தைகளை முதலில் 'மனிதர்' ஆக்குங்கள். பின்னால் 'மதானுஷ்டானிகள்' ஆக்கலாம். -ரஸ்கின்
  • குழந்தையை எத்தகைய வாழ்விற்குத் தயார் செய்ய வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளாவிட்டால் ஆசிரியன் எவனும் கல்வி அபிவிருத்தி செய்ய முடியாது. -ரஸ்கின்[2]
  • பொய்க் கல்வி பெருமை பேசும்; மெய்க் கல்வி தாழ்ச்சி சொல்லும். -ரஸ்கின்[2]
  • மக்கள் அறியாதவைகளைத் தெரிந்துகொள்ளும்படி கற்பிப்பது கல்வியின் பொருளாகாது. அவர்கள் நடையை மாற்றிச் செம்மையாக நடந்துகொள்ளும்படி கற்பிப்பதேயாகும். ரஸ்கின்[3]
  •  எந்தக் கல்வி தேவை? ஒரு மூட்டை நூல்களை வாசித்தலா? அன்று. அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரிகளே தேவை. -பர்க்[2]
  •  ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும். -பர்க்[2]
  • தேசங்களுக்கு மலிவான பாதுகாப்பு கல்வி. - பர்க்[3]
  • சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும். -மில்டன்[2]
  • இளஞ்சிறார் செவிமடுக்க வேண்டிய மொழிகள் இவையே: - 'உனக்குவேண்டியதை நீயே உண்டாக்கிக் கொள்ளலாம். நீ பட்டினி இருப்பதும் இல்லாததும் உன் முயற்சியைப் பெறுத்ததேயாகும்.' -மெல்போர்ன்[2]
  • இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால விஷயத்தில் இறந்தவன். -யுரீப்பிடீஸ்[2]
  • மாணவனிடம் செய்ய முடியாததைச் செய்யச் சொல்லாதவரை, அவன் செய்ய முடிந்ததையெல்லாம் ஒரு பொழுதும் செய்யப் போவதில்லை. -மில்[2]
  • சிறுவர்க்கான பிரதமக் கல்வி அறிவு ஊட்டுவதன்று. நல்ல வழக்கங்கள் அமைப்பதே யாகும். -போனால்டு[2]
  • மாணவர் அறிவதற்கு உத்தேசிக்கப்பட்டதை மட்டுமே அறியும் ஆசானைவிட பயங்கரமான பொருள் ஒன்றும் உலகில் கிடையாது. -கதே[2]
  • யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே[2]
  • மூடர்முன் முற்றக் கற்றவனாகக் காட்சி அளிக்க விரும்புகிறவன் முற்றக் கற்றவர்முன் மூடனாகக் காட்டிக் கொள்கிறான். -குன்றிலியன்[2]
  • இரண்டுவிதக் கல்விப்பயிற்சி உண்டு-பிறரிடம் பெறுவது ஒன்று; தன்னிடமே பெறுவது ஒன்று. இரண்டிலும் இதுவே ஏற்ற முடையது. -கிப்பன்[2]
  • கல்வியில்லாத ஆன்மா பணி செய்யாத சலவைக் கல். -அடிஸன்[2]
  • நம் மனத்தைக் கல்வியிடம் ஈடுபடுத்தற்கு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய இரண்டு முக்கிய சக்திகள் புதியதை அறிந்ததாகச் செய்வதும், அறிந்ததைப் புதியதாகச் செய்வதுமாகும். -தாக்கரே[2]
  • அதிகம் படிப்பவன் அகந்தை உடையான், கல்வியைக் காட்டுவதில் கருத்துடையான், அதிகம் பார்ப்பவன் அறிவு உடையான், அயலாருடன் வாழ்வான், அவர்க்கு உதவுவான். _லிச்சென்பரி[2]
  • அவன் கலாசாலை வழியாகச் சொன்றானா என்று கேளாதே. கலாசாலை அவன் வழியாகச் சென்றதா என்று மட்டுமே கேள். -காட்வின்[2]
  •  கல்வி கற்பிக்கும் ஆசிரியன் நூலறிவைப் புகட்டும் பொழுது மெய்யறிவை மறந்து விடலாகாது. -டெம்பிள்[2]
  • வாழக் கற்பிப்பவன் மரிக்கவும் கற்பிக்கக் கடவன். -யங்[2]
  • செடியின் மூட்டில் மண்ணை அணைத்து வை. ஆனால் மலருக்குள் விழுந்து விடாமற் பார்த்துக் கொள். உலகவிஷயங்களை எல்லாம் கற்றுக் கொள். ஆனால் அவைகளிடம் ஆன்மாவைப் பறிகொடுத்து விடாதே. -ரிக்டர்[2]
  • நாம் பெறும் கல்வியில் அதிகச் சிறப்பான பாகம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான். -ஸ்காட்[2]
  • சான்றோனாக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலே யாகும். அதனால் பெறும் அறிவும் தன்னைப் பிறர் மெச்சும்படி செய்ய மட்டும் கற்றுக் கொண்ட ஒருவித மடமையேயன்றி வேறன்று. -போலிங்புரூக்[2]
  • ஒவ்வொருவரிடமும் மறைந்துள்ள திறமைகளையும், பண்புகளையும் வெளிக்கொணர்வதே கல்வியின் உயரிய லட்சியமாகும். கல்வி ஒருவருக்கு மறுபிறவி தருகிறது என்று இதனாலேயே இந்திய ஞானிகள் கூறியுள்ளனர். நாம் மறு பிறவி எடுத்தாக வேண்டும். இந்த மறுபிறவி எடுக்கவும், கிடைக்கும் திறமைகளை வெளிக்கொணரவும் ஒருவர் தன்னைப் பற்றியறிந்து கொள்ளவும் தற்சோதனை செய்து கொள்ளவும் வேண்டியது அவசியமாகும். —பிரமானந்த ரெட்டி (3-12-1976)[4]
  • பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலை, பயங்கரமான இடம் என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது. நமது தமிழகத்தில் மறுபடி ஓர் அவ்வையார், ஓர் ஆண்டாள் பிறக்காததற்குக் காரணம் கடந்த 300 ஆண்டுகளாக உள்ள கல்விமுறைதான்.ம. பொ. சிவஞானம்[4]
  • ஒரு மாணவனிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமை, அறிவு, ஆற்றல் சிந்தனை இவற்றை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, மாணவர்கள் மண்டைகளில் பல கரடுமுரடான செய்திகளைத் திணிப்பது அல்ல கல்வி. -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[5]
  • ஒருவன் என்னதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருந்தாலும், அவன் பிறருடைய உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். அப்படி இருக்கத் தவறுவானானால் அவன் கல்வியால் பெற்ற பயன் என்னவோ! -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[5]
  • பிறருடைய கருத்துக்களிலும், இன்ப துன்பங்களிலும் பங்குகொண்டு, அவரவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து பெருமை பெறுபவனாக வாழ்வது ஒன்றே அவன் கற்ற கல்வியின் அடையாளமாகும். -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[5]
  • கல்விதான் நமக்குரிய அரசியல் பாதுகாப்பு. இந்த ஓடத்திற்கு வெளியே எல்லாம் வெள்ளக்காடுதான்.- எச். மான்[3]
  • சரியான கருத்தில், கல்விப்பயிற்சி பெறுகிறவரை மனிதன் மனிதனாக மாட்டான்.- எச். மான்[3]
  • ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி கல்வி போதிக்க வேண்டாம்; ஆனால், மனிதனாகவும். ஸ்திரீயாகவும் இருக்கக் கற்பியுங்கள். - ஹொபரிட் ஸ்பென்ஸர்[3]
  • ஒவ்வொரு தேசத்தின் மக்கட்சமுதாயத்தினுடைய பாதுகாப்பும் கதியும் மக்களுக்கு அளிக்கும் நிறைவுள்ள கல்வியைப் பொறுத்தேயுள்ளன. - கோஸத்[3]
  • பள்ளிக்கூடங்களே மக்கள் ஆட்சி முறையில் அமையும் கோட்டைக் கொத்தளங்கள். -ஹொரேன் மான்[3]
  • வாழ்க்கைக்குப் பயிற்சி பெறுவதுதான் கல்வி. வில்மாட்[3]
  • முதலாவதாக மாணவன் தன் தாய்மொழியில் புரிந்து கொள்ளவும். பேசவும், படிக்கவும். எழுதவும் நாம் கற்பிக்கவேண்டும். - எச். ஜி. வெல்ஸ்[3]
  • ஒழுக்க நெறியின் வளர்ச்சியே கல்வியின் முழு நோக்கம் அல்லது பெருநோக்கமாயிருக்க வேண்டும். - ஒ' ஷி[3]
  • சர்வ ஜனக் கல்வியில்லாமல், சர்வ ஜன வாக்குரிமை ஒரு தீமையாகிவிடும். - எச். எல். வேலண்ட்[3]
  • நன்றாகக் கற்பிப்பதானால், எந்த விஷயத்தைக் கற்பித்தாலும் எனக்குக் கவலையில்லை. - டி. எச். ஹக்ஸ்லி[3]
  • கற்பிப்பதன் இரகசியம் மாணவனுக்கு மதிப்பளிப்பதில் இருக்கின்றது. - எமர்ஸன்[3]
  • மானிட உள்ளத்தின் கல்வி. தொட்டிலில் தொடங்குகின்றது. - டி. கோகன்[3]
  • பொதுக் கல்வியே அரசாங்கத்தின் முதல் இலட்சியமாயிருக்க வேண்டும். - நெப்போலியன்[3]
  • கல்வி அழகே அழகு. -நாலடியார்[3]
  • எம்மை உலகத்தும் யாம் காணோம் கல்வி போல்
    மம்மர் அறுக்கும் மருந்து. - நாலடியார்[3]
  • கல்வி கரையில, கற்பவர் நாள்சில. -நாலடியார்[3]
  • கேடில் விழுச்செல்வம் கல்வி - திருவள்ளுவர்[3]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.30 2.31 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39 2.40 2.41 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 155-156. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. 4.0 4.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  5. 5.0 5.1 5.2 என். வி. கலைமணி (1999). ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 9-41. பாரதி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் கல்வி என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கல்வி&oldid=36894" இலிருந்து மீள்விக்கப்பட்டது